No results found

    அமைச்சர் செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனைக்கு மாற்றம்


    அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்ததை தொடர்ந்து, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சென்னை ஓமந்தூரார் அரசு பன்னோக்கு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவரது இதய ரத்தக்குழாய்களில் அடைப்புகள் இருப்பதாகவும், பைபாஸ் சர்ஜரி செய்யவேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதற்கிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜியின் மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது ஐகோர்ட்டு இன்று விசாரணை நடத்தியது. இந்த விசாரணையில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு கோரிக்கையை ஏற்று, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. தொடர்ந்து ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையை 22-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிப்பது குறித்து காவேரி மருத்துவமனையின் முதன்மை செயல் இயக்குனர் அரவிந்தன் தலைமையில் மருத்துவக் குழுவினர் ஆலோசனை நடத்தினர். மயிலாப்பூர் காவல் துணை ஆணையர் காவேரி மருத்துவமனையில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். சென்னை ஐகோர்ட்டு உத்தரவின்படி செந்தில் பாலாஜியை மாற்றுவதற்கான ஆணையை மின்னஞ்சல் மூலம் ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகத்திற்கு புழல் சிறை நிர்வாகம் அனுப்பியது. இந்நிலையில், செந்தில் பாலாஜி ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, பலத்த போலீஸ் பாதுகாப்போடு காவேரி மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அழைத்துச் செல்லப்பட்டார். காவேரி மருத்துவமனை போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. மருத்துவமனை வளாகத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    Previous Next

    نموذج الاتصال